எனக்கான முகமூடி

கனவு மூட்டைகளை சுமந்துகொண்டு
நீண்டதொரு பயணம், ஏதும் இலக்கின்றி.
சாலையெங்கும் சுற்றித்திரிந்தன மனிதஉடல்கள்
பல வண்ணங்களில் மனித முகங்கள் .
நாற்றமெடுத்து அழியபோகும் சதைபிண்டங்களை
தூக்கிச்செல்லும் பிணங்களோடு சந்திப்புகள்.
சந்திப்புகள் சிலதூரங்களில் பாதை மாறின.
ஏன்? என்ற கேள்வியோடு பயணத்தடை.
பதிலன்றி பயணம் தொடர அச்சம்.
தெரிந்துகொள்ள முயற்சித்து அதிர்ச்சி.
அனைத்தும் முகமூடி போர்த்தியவை.
புரிந்து கொண்டேன் முகமூடியின் அவசியத்தை.
பகட்டான முகமூடியின்றி பயணத்தை தொடரமுடியாது.
எங்கே எனக்கான முகமூடி?

நொறுங்கிவிட தாமதமில்லை .

கெஞ்சலான இரவு,
கிறக்கமான நட்சத்திரம்,
பருவமடைந்த நிலா,
வானத்திலோர் புரவி
செந்நிற புரவி
வெண்ணிறஆடை தேவதை
தென்றலாய் தவழ்ந்தாள்
புரவி மேலிருந்து.
தலைகோதி அருகிலமர்ந்தாள்
மெல்ல கரம்பிடித்தாள்.
எங்கோ பறந்தோம்
பிரபஞ்சத்தின் நடுவே
ஓர் மஞ்சம்
மஞ்சத்தில் தஞ்சம்.
காமம் கரைபுரளும்
கருவிழி கண்கள்
சில்லென்ற முத்தம்
உடல்முழுதும் தீமூட்டியது
தீயணைக்க அணைத்தாள்
பூச்சர கைகளில்
இரும்பொத்த வலிமை
அக்கணமே நொறுங்கிவிட
நொடியேதும் தாமதமில்லை .

ஆசை...

என்னால் உணரமுடிகிறது, சொர்கத்தின் நுழைவு வாசல் என் நிழல் கண்டதும் கதவடைப்பதை.நிச்சயமாக சொல்ல முடியும் என்னால், என் சுதந்திர சிறகுகள் ஒவ்வொன்றாய் பிய்த்தெறியப்படுவதை.என் இன்பங்கள் துரோகங்களின் கோரப்பற்களில் சிக்கி இரத்தம் வடித்து கொண்டிருகின்றன .

தெரிந்து கொள்ளவும் ஆசை, தெரிந்து விட்டால் உயிர் நாடி உறைந்து விடுமோ என்ற உணர்வு.நான் ஏமாந்து விட்டேனா? இல்லை ஏமாற்றப்பட்டு விட்டேனா?இதுதான் அறிய துடிக்கும் ரகசியம்.

துரோகங்களும், ஏமாற்றங்களும் இரத்தம் சொட்ட என்னை பிய்த்து தின்று சிரித்துக் கொண்டிருக்கின்றன.

நிலையற்ற வாழ்வில் நிஜமாக தோன்றினாள்.
நீ தேடிய சொர்க்கம் நான்தான் என்றாள்.
தோழமையும், தாய்மையும் தாரை வார்த்தாள்.
அன்பையும், காதலையும் பருக கொடுத்தாள்.
பெண்மை இதுதான் என்று அறிய வைத்தாள்.
என் ஆண்மையை உணர வைத்தாள்.
உயிரை பிய்த்தெடுக்கும் வலியும் இதுதான்
என்று உணர வைத்து சிரித்துக்கொண்டாள்.

அந்த நீல வானம் கருப்பு ஆடை போர்த்திக் கொண்டு மின்னல்களால் சிரித்துக் கொண்டிருந்த வேளை. தென்றல்களும் பேய் பிடித்து ஆடிக் கொண்டிருந்த தருணம்.என் கால்களில் மட்டும் நிதானம்.எங்கே நடக்கிறேன் என்ற அறிவுக்கு எட்டாத நிலை. கால்கள் நின்ற இடம் கவலைகளை மறந்த மனித கூடுகள் அடங்கிய மயானம்.எங்கோ நாய்களின் ஓலம்.எரி நட்சத்திரம் ஒன்று என்னை நோக்கி வீழ்ந்துகொண்டிந்தது.தனிமை கை நீட்டி அழைப்பது போல் பிரம்மை .இல்லை அதுதான் உண்மை என்று நகக்கண்களில் இரத்தம் கசிய எனக்கான சவக்குழியை தோண்டிய மண்மேடை மீது மண்டியிட்டு அழுகிறேன் .
நான் கதறிய வேளையில் நீ கண்களுக்கு மை தீட்டி கொண்டிருந்திருக்கலாம் ஆனந்தமாக.என் இதயத்தில் இரத்தம் சொட்டிய போது குங்குமம் வைத்து கொண்டிருந்திருக்கலாம் குதுகலமாக .என் வாழ்க்கை கிழித்தெறியும் தருணங்களில் நீ கூரப்பட்டு சூடிக்கொண்டிருக்கலாம் மல்லிகை பூக்களோடு.
என் கனவுகள் எரிகின்ற தருணத்தில் நீ மஞ்சத்தில் மல்லுக்கட்டி சிரித்துக் கொண்டிருந்திருக்கலாம்.

தீர்க்கமாக கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தேன். துரோகம், தோல்வி, ஏமாற்றம் இவைகள் இன்னும் எத்தனை முகங்களோடு அலைகின்றன என்று பார்க்க அசைப்பட்டவனாக. நானே என் பிணத்தை தூக்கி நடந்தேன்...

இதுதான் காதலா?

புரியவில்லை
தெரியவில்லை
குழப்பம்
ஓ...
இதுதான் காதலா?

யார் சொல்வது?

காதல்
என்னை
ஏமாற்றி விட்டது
யார் சொல்வது?
கவிதை
கற்றுத் தந்துள்ளது.

இப்படியா!!!?

அவள் முகம்
பௌர்ணமி நிலா
மறுபக்கம்?
இப்படியா!!!?

பறித்துச் சென்றாள்

எனக்கு
சொந்தமென்று சொல்ல
இதயம்கூட இல்லை.
அதையும் அவள்
பறித்துச் சென்றுவிட்டாள்.

காதலோடு புன்னகைத்திருந்தாள்

காதலோடு புன்னகைத்திருந்தாள்
அன்பே, கண்டங்களோடு
கிரகங்களையும் வென்றிருப்பேன்.
காதலால், உன் கண்ணீர்
காண முடியாமல்
வாளெடுத்து வென்றுவிட
இது கண்டங்கள் அல்ல - காதல்
என்று கூறி திரும்புகையில்
கண்களில் நின்ற நிஜங்கள்
சருகுகளாய் வீதியெங்கும்
இறைந்து கிடக்கிறது

பொய் - உன்மை


அன்பு
காதல்
பாசம்
அனைத்தும் பொய்.
இவைகளால் ஏற்படும்
வலி
வேதனை
மட்டுமே உன்மை.

வரம் கேட்கிறேன்

உன்னை
நினைக்கும்
பொழுதெல்லாம்
இதயம்
துடிதுடிக்கிறது.
என்
இதயத்தில்
வாழும்
உனக்கு
வலிக்கக்கூடாது
என்பதற்காக
வரம்
கேட்கிறேன்
கடவுளிடம்
இதயம்
நின்றுபோக.

துடைத்துவிட வருகிறேன்

என்
இதயத்தை
கசக்கிக்
கொண்டிருப்பவளே.
ரத்தக்கறை
படிந்தால்
சொல்லியனுப்பு
துடைத்துவிட
வருகிறேன்.

கண்ணீர் பூ


பூக்களும்
கண்ணீர் சிந்தும்
அன்பே - நீ
அழுத போது
தெரிந்து கொண்டேன்.

நினைவு

நிலவை
பார்த்துக் கொள்கிறேன்
உன் நினைவு
வரும் பொழுதெல்லாம்.
நீயும்
நிலவு பார்ப்பாய்
என்ற நம்பிக்கையோடு.
பார்வைகள்
சந்தித்துக் கொள்ளுமே
நிலவில்!

பிடிக்கும்

என்னை
அவளுக்கு
பிடிக்கும்.
அவளுக்கு
என்னை
பிடிக்கும்.
எங்களைத்தான்
யாருக்குமே
பிடிக்கவில்லை.

மின்மினி மின்னல்கள்

அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.
பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.
இன்றும் அழுது கொண்டிருக்கிறேன்
மின்மினி மின்னல்களை நினைத்து

காதலி

அன்று
காதலி
இன்று
காதல் வலி.

காதல்- கேள்விகள்...



கேள்விகள் உண்டு...
அதனால்..
கவனமாய் படியுங்கள்...
காதல் ஒரு மனிதனுக்கு...
எத்தனை முறை வரும்?
அல்லது வரவேண்டும்?
எப்படி வரவேண்டும்?
ஏன் வரவேண்டும்?
எங்கு வரவேண்டும்?
எதற்கு வரவேண்டும்?
எப்பொழுதெல்லாம் வரவேண்டும்?
எனக்கு ஒரு முறை மட்டுமே வந்தது...
என்னுயிர் காதலிக்கு?
யாராவது...
இதைப் படிக்கும் யாராவது...
நீங்கள்...
வழக்கறிஞரா? வாத்தியாரா? ...
பொறியாளரா? மருத்துவரா?...
கலைஞரா? இல்லை கவிஞரா?...
யாராவது... யாராவது...
சரியான விடையைச் சொல்லுங்களேன்...
காத்திருக்கிறேன்...

( நன்றி - அனாமிகா பிரித்திமா )

காதலை மட்டுமல்ல...

என்னை உலுக்கிய ஒவ்வொரு கணமும் இன்னும் இருக்கின்றன,
காதலை மட்டுமல்ல...
உங்களின் அத்தனை உறவுகளையும் இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
வாழப் பிடிப்பதற்கு அதுவேதான் ஆதாரம்.
காயங்கள், இழப்புகள், பிரிவுகள்... யாருக்கு இல்லையென்று சொல்லுங்கள்?
பூக்கள் எவ்வளவு மலர்ந்து உதிர்ந்தாலும்... வாசம் உண்டு.
மேகங்கள் எத்தனை கடந்து போனாலும்... வானம் உண்டு.

கெண்டை விழிகள்

அவள் இப்போது எங்கேயோ இருக்கிறாள் .
நான் ரசித்த அந்தக் குண்டு குண்டான கெண்டை விழிகள் .
இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை.
அந்தக் கண்கள் மீது நான் கொண்ட காதல்
அப்படியே மாறாமல் இருக்க வேண்டுமென்பதற்காக,
நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை.

என் காதல்...

என் காதலின் எடை என்ன
என்பதை
மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிட முடியாது.

கத்தியால் கைகீறி ரத்தம்
காட்டவும் மாட்டேன்.
நேசம்காட்ட அனுமன்போல்
நெஞ்சுகிழிக்கவும் மாட்டேன்.

பின் -
அடையாளம் எதுவென்பாய்.

என் வானத்தில் சூரியன்
அஸதமிக்கவில்லையே
அதுதான் அடையாளம்.

நினைவு தேவதை...


என்
நினைவு தேவதை
என்றென்றும்
கனவுகளில் முள்ளாய்.

காதல் ஏமாளி

எல்லா பெண்களும்
ஏமாற்றுக்காரர்கள் அல்ல -காதலில்.
ஆனால் காதலில்
ஏமாற்றுபவர்கள் பெண்கள் மட்டும்தான்.

நம்பிக்கை...

நம்பிக்கையோடு
கரங்களை உயர்த்து
முகில்கள் தட்டுப்படும்.

முயற்சிக்குப் பின்
உன் பாதங்களின்
கீழே பார்
முகடுகள் தென்படும்.

தெரிந்த கதை

இரத்தம் இல்லாமல்
வெளுத்துப் போன
சிவந்த இதழ்கள்

அழகாக சிரித்தது
மனம் பரித்தது
மறந்தும் ஆசையோடு
தீண்டிப் பார்க்க
தோன்றுபவர்கள்
இதழ்களை தடவி
கீழே விரல்கள்
நீண்டால் நிச்சயமாக
அவர்களுக்கு கிடைக்கும்
குருதியுடன் வலி.
ஆம்
அது முட்களோடு
கூடிய வெள்ளை ரோஜா.

புறா ஒன்று காதலித்தது
அந்த வெள்ளை ரோஜாவை

வெள்ளை ரோஜாவின்
மௌனத்தோடு
காலங்கள் கரைந்தன.

ஒரு தருணத்தில்
"ஏன்
இந்த மௌனம்
உன் மனம்
கவர்ந்தது வேறு

ஏதாகிலும் உண்டா
கூறிவிடு
என் மனதை
மூடி வைக்கிறேன்
"
என்ற கேள்விக்கு
மௌனம் கலைத்தது
வெள்ளை ரோஜா.

நிச்சயமாக ஏற்றுக்கொள்கிறேன்
உன் காதலை
என் ஆசை
நிறைவேறட்டும்.

ஆச்சரியமுடன் பார்த்தது புறா.

ஆம்
நான்
சிவப்பாக வேண்டும்
கூறியது வெள்ளை ரோஜா

நாட்கள் நடந்தன
வாரங்கள்
மாதங்கள் ஆகியது

முடிவுக்கு வந்த புறா
உறுதியோடு
ரோஜாவின் முட்களில்
மெத்தையென புரள
குருதி பெருகி
வெள்ளை ரோஜா
கொஞ்சம் கொஞ்சமாக
மாறிக்கொண்டிருந்து
சிவப்பாக.

ரோஜாவிற்கு
ஆனந்தம்
முழுவதும்
சிவப்பாக
மாறியதால்

பாவம்
உரமாகிப் போனது
புறா

என் தேவதை

எண்ணங்கள்
எண்ணிக்கை இல்லாமல்
சிதறிக் கிடக்க

நினைவுகளில்
நிலை நிறுத்தி
சிந்தையில் கிடத்தி

கற்பனைக்
கவிதைகளை காதலுடன்
சிலவற்றை எழுத

எழுதுகோல்
எடுத்து சிக்கலாய் கிறுக்கினேன்
ஒற்றை வரி கவிதை,
என் தேவதையின் பெயர்.

முரண்பாடு

எங்கள் ஜனனம்
சூரிய அஸ்தமனத்தில்
"அல்லி பூக்கள்"

பௌர்ணமி

வளர்ந்த
பின்னும்
ஆடையின்றி
அலைவது
ஏன்?

நிலா

மேகமே
என்னை
மறைத்துக் கொள்.
என்
நிர்வாணத்தை
உலகம்
பார்கிறது
"நிலா"

சில நிமிட சொர்க்கம்

சில நிமிட சொர்க்கம் என் அருகில்
நீ பார்த்த அந்த ஒரு நொடி.

இதழ் இழைந்தால்

ரணமானது இதயம்
உன் கடைக்கண் கல்வீச்சால்.
நிச்சயமாக குணமாகும்
உன் இதழ் இழைந்தால்.

புரியும்வரை..தெரியும் வரை



நடக்க தெரிந்த கால்களுக்கு
இலக்கு தெரியவில்லை
இது என்று தெரியாமல்
எதையோ குழப்பும் - மனம்
நினைவுகளின் கோபுரம்
இருந்தும் தெளிவில்லாமல்
எதை நினைத்து எழுதுகோல் பிடித்தேன்.
சிந்தனை தெளிவில்லாமல்
எதையோ எழுத நினைத்து
எதையோ எழுதி கொண்டு
அதிலும் ஒன்றிப் போகாமல்
எழுதுவதை நிறுத்தி விட்டு
எழுதியதை வாசித்தேன்
புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றேன்
புரிந்து கொள்ள ஆவலாய்.
புரியும்வரை..
தெரியும் வரை...
எழுதிக் கொண்டிருப்பேன்.

கனவு...



கார்முகில் படகை
மின்னல் துடுப்பு கொண்டு
வானில் அலை மோத
விண்மீன்களின் நடுவே பயணம்
கண் கண்ட இடமெல்லாம்
நட்சதிரங்களின் சிரிப்பு
நிலவை இலக்காக கொண்டு
இருளை துனையாக்கி முன்னேற்றம்
எங்கும் கோள்களின் நாட்டியம்
ஒன்றுடன் ஒன்று கைகோர்காமல்
நிச்சயமாக தெரியவில்லை எப்பொழுது
இறங்கினேன் நிலவில் என்று.

புள்ளியாய் கண்ணீர்...


இயற்கை அன்னை விரித்து வைத்த புல்வெளி
பச்சை கம்பளமாய் பாதங்களுக்கு இதமாய் ஒத்தடம் கொடுக்க.
சொர்கம் சொக்கிப் போகும்
கொஞ்சம் இளைப்பாற இடம் கேட்க்கும்
அழகுக்கு நாங்கள் அஸ்திவாரம் இப்படி கர்வமாக நிமிர்ந்திருந்த
பூக்காட்டுக்குள் மொனத்தை மொழியாக்கி நடந்து சென்றோம்..

முத்துச் சிப்பிக்குளிருந்து முத்துக்கள் சிரித்தது சின்னதாக.
ஆம் - அவள் சின்னதாக புன்னகைத்து கூறினாள்
அங்கே அமரலாம்.

யாரோ ஒரு கலைஞ்னின் கவித்துவமான படைப்பில்
உருவாகி இருந்தது அந்த சிறிய நீரூற்று.
வெள்ளை தாவணி போர்த்திக் கொண்டு
அழகாக நீராடிக் கொண்டிருந்தது அந்த நீரோடை
பொன்னிறமான இளவம்பஞ்சு பாதங்களை
நீரோடை முத்தமிட அமர்ந்தாள் - அருகில் நானும்
அழகாக ரசித்துக்கொண்டிருந்தது அந்த நிலவு - நீரோடையை.
ஆம் அவள்தான் - நானும் ரசித்துக்கொண்டிருந்தேன்
என்னவளை - ஆம் நிலவை.
சற்று முகம் திருப்பி புன்னகைத்து கேட்டாள் "என்ன?"
உதடுகள் பிரியாமல் கண்களால் கேட்ட கேள்விக்கு - பதில்
உதடுகள் பிரித்து நான் மட்டும் முத்தமிடும் இப்பாதங்களை
நீரோடை முத்தமிடுகிறது, பூக்கள் அனைத்தும் உன் அழகை தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருந்ததால் இன்று முதல் எதிரியாகி விட்டார்கள்
என்று சொல்ல நினைத்து ஒன்றும் சொல்லாமல்
கண்களால் பதில் கூறினேன் - ஒன்றும் இல்லை.

ஆர்பாட்டம் இல்லாமல் அழகாக ஓடும் ஓடை
சுதந்திரம் எங்களுக்கு மட்டுமே சொந்தம்
என்று சொல்லித் திரியும் மீன் கூட்டங்கள்.
ஜதி போட தெரியும் என்று
சலசலத்து ஓடும் தண்ணீர்
இயற்கை தீட்டிய உயிர் கொண்ட ஓவியமாய்
தென்றலின் தாலாட்டுக்கு தகதிமியாடும்
வண்ணமிகு மலர்த்தோட்டம்
இயற்கை தேவனை ஆசானாக கொண்டு
கற்றுக் கொண்ட பாடலை
மரங்களின் சலசலப்பு பக்கவாத்தியங்கள் முழங்க
மெய்மறந்து பாடிக்கொண்டிருக்கும் குயில்.
இப்படியே சொல்லிக் கொண்டே சென்றவள்
உனக்கு பிடித்திருகிறதா என்றாள்


மெதுவாக அவள் கண்ணங்களை தொட்டு திருப்பினேன்
இவைகளில் ஒன்றைகூட என் மனம் ரசிக்க மறுக்கிறது
இவை அனைத்திற்கும் குத்தகை எடுத்தாற்போல்
நீ என் அருகில் இருக்கும்போது உன்னையன்றி
நான் எவற்றை ரசிக்க மனம் கொடுப்பேன்.

காலைப் பனித்துளி காய்ச்சல் கொண்டு வழிவதுபோல
அவள் ஊதாப்பூ கண்களில் இருந்து கண்ணீர்
கொப்பளித்து வழிந்தது.
கண்ணீர் சிந்திய முத்துக்களை கையேந்தி கைப்பற்ற
என் இதயத்தில் எரிமலை எரிச்சல் - கண்ணீர் வெப்பம் தாங்காமல்

அவள் தேன்குரல் தழுதழுத்து தடங்கலாய் கூறியது
எனக்கு என் காதலை ஆசையை அன்பை
சொல்லத் தெரியவில்லை என்று.
சொன்னபடியே தன் பிஞ்சு விரல்களால் என் கரங்களை பற்றி
என் கண்ணீர் துளிகளை கேட்டுப்பார் அது சொல்லும் என் காதலை அன்பை
என்றபடி கரங்களுக்கிடையே முகம் புதைந்தாள்
வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தேன் கண்ணீர் துடைக்க
மௌனம் இதையன்றி வேறொன்றும் தோன்றவில்லை
நிமிடங்கள் நிசப்தமாய் கரைய
மெதுவாக என் பௌர்ணமி நிலா முகம் காட்டியது
வேறொன்றும் பேசாமல் புன்னகைத்தேன்
என் புன்னகை பிறவிப்பயன் பெற்றது
ஆம் - அவளும் புன்னகைத்தாள்.

எங்களுக்காக பூத்த புதிய உலகம்
வானம் நீல வண்ணஆடை கட்டி தூரத்தில் முந்தானையை காயவிட்டிருந்தது
முந்தானையில் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் தீட்டிக்கொண்டிருந்தது - சூரியன்.
கைகள் கோர்த்தபடி மெய்மறந்து நடந்தோம்.
இருவரும் உணர்ந்து நின்றோம்
நாங்கள் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது.

கண்கள் பார்த்துக்கொண்டு நின்றோம்
அவள் கண்களில் மீண்டும் முத்துக்குவியல் அரும்பியது
அவள் கரங்களில் இதழ் பதிக்க ஆசையாய் கைகளை தூக்கினேன்
கண்கள் மூடி மனதுக்குள்ளே முத்தமிட்டேன்
வெளிவர துடித்த அழுகையை கைகளால் அடைத்துக்கொண்டு
என்னை விட்டுச் சென்றுகொண்டிருந்தாள்
அவள் உருவம் நிழலாய் கண்களில் இருந்து
மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன்
அவள் சிறு புள்ளியாய் தேய்ந்து கொண்டிருந்தாள்
புள்ளியாய் கண்ணீர் பிறந்தது.....