என்னால் உணரமுடிகிறது, சொர்கத்தின் நுழைவு வாசல் என் நிழல் கண்டதும் கதவடைப்பதை.நிச்சயமாக சொல்ல முடியும் என்னால், என் சுதந்திர சிறகுகள் ஒவ்வொன்றாய் பிய்த்தெறியப்படுவதை.என் இன்பங்கள் துரோகங்களின் கோரப்பற்களில் சிக்கி இரத்தம் வடித்து கொண்டிருகின்றன .
தெரிந்து கொள்ளவும் ஆசை, தெரிந்து விட்டால் உயிர் நாடி உறைந்து விடுமோ என்ற உணர்வு.நான் ஏமாந்து விட்டேனா? இல்லை ஏமாற்றப்பட்டு விட்டேனா?இதுதான் அறிய துடிக்கும் ரகசியம்.
துரோகங்களும், ஏமாற்றங்களும் இரத்தம் சொட்ட என்னை பிய்த்து தின்று சிரித்துக் கொண்டிருக்கின்றன.
நிலையற்ற வாழ்வில் நிஜமாக தோன்றினாள்.
நீ தேடிய சொர்க்கம் நான்தான் என்றாள்.
தோழமையும், தாய்மையும் தாரை வார்த்தாள்.
அன்பையும், காதலையும் பருக கொடுத்தாள்.
பெண்மை இதுதான் என்று அறிய வைத்தாள்.
என் ஆண்மையை உணர வைத்தாள்.
உயிரை பிய்த்தெடுக்கும் வலியும் இதுதான்
என்று உணர வைத்து சிரித்துக்கொண்டாள்.
அந்த நீல வானம் கருப்பு ஆடை போர்த்திக் கொண்டு மின்னல்களால் சிரித்துக் கொண்டிருந்த வேளை. தென்றல்களும் பேய் பிடித்து ஆடிக் கொண்டிருந்த தருணம்.என் கால்களில் மட்டும் நிதானம்.எங்கே நடக்கிறேன் என்ற அறிவுக்கு எட்டாத நிலை. கால்கள் நின்ற இடம் கவலைகளை மறந்த மனித கூடுகள் அடங்கிய மயானம்.எங்கோ நாய்களின் ஓலம்.எரி நட்சத்திரம் ஒன்று என்னை நோக்கி வீழ்ந்துகொண்டிந்தது.தனிமை கை நீட்டி அழைப்பது போல் பிரம்மை .இல்லை அதுதான் உண்மை என்று நகக்கண்களில் இரத்தம் கசிய எனக்கான சவக்குழியை தோண்டிய மண்மேடை மீது மண்டியிட்டு அழுகிறேன் .
நான் கதறிய வேளையில் நீ கண்களுக்கு மை தீட்டி கொண்டிருந்திருக்கலாம் ஆனந்தமாக.என் இதயத்தில் இரத்தம் சொட்டிய போது குங்குமம் வைத்து கொண்டிருந்திருக்கலாம் குதுகலமாக .என் வாழ்க்கை கிழித்தெறியும் தருணங்களில் நீ கூரப்பட்டு சூடிக்கொண்டிருக்கலாம் மல்லிகை பூக்களோடு.
என் கனவுகள் எரிகின்ற தருணத்தில் நீ மஞ்சத்தில் மல்லுக்கட்டி சிரித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
தீர்க்கமாக கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தேன். துரோகம், தோல்வி, ஏமாற்றம் இவைகள் இன்னும் எத்தனை முகங்களோடு அலைகின்றன என்று பார்க்க அசைப்பட்டவனாக. நானே என் பிணத்தை தூக்கி நடந்தேன்...